"தாத்தா சாமிகிட்ட போறேம்ப்பா" கைவிட்ட பிள்ளைகள் - ஆற்றில் குதித்த முதியவர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெற்ற மகன்கள் கவனிக்காததால் விரக்தியடைந்த முதியவர் ஒருவர், பாலத்தின் மீதிருந்து ஆற்றுக்குள் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், தீயணைப்புத்துறையினர் அவரை போராடி காப்பாற்றியுள்ளனர்.
செவ்வாய்கிழமை காலை சாத்தூர் வைப்பாற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரில் முள் செடிகளைப் பிடித்தவாறு முதியவர் ஒருவர் தத்தளிப்பதைப் பார்த்த மக்கள் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். வைப்பாற்று பாலத்தின் மீது முதியவரின் ஊன்றுகோலும் காலணிகளும் கிடந்துள்ளன. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி முதியவரை மீட்டனர்.
விசாரணையில் அந்த முதியவர் தெக்கூர் கிராமத்தை சேர்ந்த அருணாசலம் என்பது தெரியவந்தது. 75 வயதான அருணாசலத்துக்கு 4 மகன்கள் உள்ளனர். நான்கு பேருக்குமே திருமணமாகி அதே ஊரில் வசித்து வருகின்றனர்.
முதியவரை கவனித்துக் கொள்வதில் அந்த 4 பேருக்குமே போட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. மருமகள்கள் சரியாக உணவு வழங்குவதில்லை என்றும் மகன்களும் அவர்களை கண்டுகொள்வதில்லை என்றும் கூறுகிறார் முதியவர்.
இதனால் விரக்தியடைந்த முதியவர், ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறார். தனது உறவினர்கள் சிலரிடமும் தாம் ஆற்றில் குதித்து சாகப்போகிறேன் என அவர் கூறியிருக்கிறார்.
முதியவர் எப்போதும் போல புலம்புகிறார் என எண்ணி அவர்களும் அலட்சியமாக இருந்துள்ளனர். தற்கொலை முயற்சிக்கு முன்னதாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த தனது பேரப் பிள்ளைகளிடம் சென்ற முதியவர், பாக்கெட்டில் இருந்த 30 ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு, "தாத்தா சாமிகிட்டே போறேன்" என்று வேதனையோடு கூறிச் சென்றுள்ளார். பிறகு வைப்பாறு பாலத்துக்குச் சென்ற முதியவர், அங்கிருந்து ஆற்றில் குதித்துள்ளார்.
ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட அருணாசலத்துக்கு காலில் வலி இருந்ததாலும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாலும் தீயணைப்புத்துறையினர் ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
குறிப்பிட்ட வயதுக்கு மேல் உடலளவிலும் மனதளவிலும் பலவீனம் அடைந்து முதுமையை அடைபவர்களை சுமையாகக் கருதாமல் இறுதி நாட்கள் வரை பராமரிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
Comments